கலையுலக வாரிசு மட்டும்தான்!

கலையுலக வாரிசு மட்டும்தான்!

நாற்காலிக் கனவுகள்

1984 ல் புகழின் உச்சியில் இருந்த போது அ.தி.மு.க.வில் இணைந்தவர் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ்.

1977ல் திரையுலகில் உதவி இயக்குநராகவும் சிறு வேடங்களில் நடிப்பவராகவும் நுழைந்த பாக்யராஜின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.  அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்த அவரது பல படங்கள் சக்கைப்போடு போட்டன. 1983 காலகட்டத்தில் முருங்கைக்காய் பெருமையை ஓங்கி உலகறியச் செய்த ‘முந்தானை முடிச்சு' படம் அபார வெற்றியடைந்தது. முப்பது லட்சத்துக்கு தயாரான படம் நான்கு கோடி வசூலைத் தொட்டது. கமல், ரஜினி படங்கள் நாற்பது லட்சங்களுக்கு விற்க கஷ்டப்பட்ட நிலையில் பாக்யராஜின் ‘தாவணிக் கனவுகள்‘ ஒன்றேகால் கோடிக்கு விற்றது. தனது படங்களில் எம்.ஜி.ஆர் புகைப்படத்தையோ  அல்லது அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் வசனங்களை வைக்கவோ பாக்யராஜ் தவறியதில்லை. பூர்ணிமாவுடன் அவரது திருமணத்தை நடத்தி வைத்தவரும் எம்.ஜி.ஆர்.தான். அந்தச் சமயத்தில் கலைவாணர் அரங்கில் ‘மன்ற முரசு' என்ற பெயரில் நாளிதழ் ஒன்றை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். பாக்யராஜும் அந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். எம்.ஜி.ஆர் பேசும்போது யாரும் எதிர்பாராத வகையில் பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்தார். உணர்ச்சிவசப்பட்ட பாக்யராஜ் தன்னை அ.தி.மு.க.வில் இணைத் துக்கொள்வதாக அறிவித்தார். ‘உனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்; கட்சியில் இணைய வேண்டாம்‘  என்று எச்சரித்தார் எம்.ஜி.ஆர்.

பாக்யராஜின் துரதிஷ்டம் அவர் கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் அவர்.  எம்ஜிஆரின் உடல் நலம் குறித்து பல வதந்திகள் நிலவின. அச்சமயம் அமெரிக்கா சென்று அவரைப் பார்த்துவிட்டு தமிழகம் திரும்பி அவரைப்பார்த்த சம்பவத்தை விவரித்தார். ஆனால் அவரை செல்வாக்கு பெறவிடாமல்  முட்டுக்கட்டைகளும் போடப்பட்டன. எம்.ஜி.ஆர் சென்னை திரும்பிய பின்னரும் அந்த புள்ளிகளின் சதிச்செயல்களால் கட்சியில் அவரால் செல்வாக்கு பெற முடியவில்லை. 

1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர் மறைந்துவிட கட்சி ஜெயலலிதா - ஜானகி என்று பிளவுபட , ஜானகி பக்கம் இணைந்தார் பாக்யராஜ். கட்சி பிளந்த பிறகு தனக்கு எதிராகச் சதி செய்தவர்களின் பிடியிலிருந்த ஜானகி அணியில் இணைந்தது பாக்யராஜ் செய்த தவறு. அந்த நிலையில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டார் பாக்யராஜ். 1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனது செல்வாக்கை நிரூபிக்க, தொடர்ந்த காலகட்டங்களில் பிரிந்த அணிகள் இணைந்து கட்சி ஜெயலலிதா கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு மனத்தடை இருந்தது. ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில்  ஜெயலலிதாவை பல மேடைகளில் கடுமையாக விமர்சித் திருந்தார் அவர். இந்தச் சூழலில்தான் 1989 பிப்ரவரி 21 - ல் ‘எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற தனிக்கட்சியைத் துவக்கினார். அப்போது ‘கல்கி' இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் ‘இரட்டை இலை சின்னத்துக்காகவும் சொத்துக்காகவும் இணைவதில் எனக்கு உடன்பாடில்லை. பாருங்க .... இன்னும் ஒரு வருடத்தில் எல்லோரும் ஓடப்போறாங்க‘ என்றார். அப்போதும் அவரது கணிப்பு தவறாகிப் போனது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஜானகி அணியில் பாக்யராஜ் இருந்தபோது அவருக்கெதிராக சதி செய்தவர்களில் சிலர்  ஜெயலலலிதா தலைமையிலான கட்சியிலும் பின்னர்  ஆட்சியிலும் முக்கியப்  பொறுப்பில் இருந்தார்கள் என்பதுதான். 

ஜெயலலிதா தலைமையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க செல்வாக்கைப் பெற்று வந்த நிலையில் பாக்யராஜின் கட்சிக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லை. 1500 ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் பல ரசிகர் மன்ற பொறுப்பாளர்களே பாக்யராஜின் தனிக்கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக  ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொணடே போனது.‘நீங்கள் தலைவரின் கலையுலக வாரிசு மட்டுமே' என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள் கட்சித்தொண்டர்கள். எம்.ஜி.ஆர் தொண்டர்களின் நம்பிக்கையை பெறும் அளவுக்கு தனது அரசியல் செயல்பாடுகளை அவரால் வகுத்துக் கொள்ள முடியவில்லை. திரையுலகை முற்றிலும் துறந்து அரசியல் உலகில் தடம் பதிக்க முழு மனதான முயற்சியிலும் அவர் இறங்கவில்லை.

அந்தக் காலகட்டத்தில் நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருந்த அவரது  அலுவலகத்தில் ஒரு முறை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது  சிவாஜி அரசியலில் தோற்று விட்டது குறித்து பேச்சு வந்தது. ‘அவர் தோற்றுவிட்டார் என்பதற்காக பாக்யராஜ் அரசியலுக்கு வரக்கூடாதா?' என்று அவர்  ஆவேசப்பட்டது நினைவுக்கு வருகிறது. கட்சியில் வழிகாட்ட அனுபவஸ்தர்கள் இல்லாத நிலையில் சில மாதங்களிலேயே செயல்பாடுகள் முடங்கிப்போக ஒரு தேர்தலை கூடச் சந்திக்காத நிலையில் கட்சி காணாமல் போனது.  அதைவிட முக்கியமாக அவரது கட்சியை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மை. அவர் திரைப்படங்களில் நகைச்சுவை கலந்த பாத்திரங்களில் நடிதது புகழ் பெற்றதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும். கட்சி இயற்கை மரணமடைய திரையுலகிலும் செல்வாக்கில் சரிவு துவங்கியது. பின்னர் வந்த கால கட்டங்களில் திரையுலகில் தன்னை தக்க வைத்துக் கொள்ளவே அவர் போராடவேண்டியிருந்தது. அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய ஜெயலலிதாவுக்கு பாக்யராஜ் பல முறை  தூது விட்டதாகவும் தகவல்கள் அடிபட்டன. ஆனால்  அப்படி ஏதும் நடக்கவில்லை. 1996ல் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பாக்யராஜ் அதில் இணையப்போவதாக பலமாக பேச்சு அடிபட்டது. ‘எம்.ஜி.ஆரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவன் நான். இன்னொரு கட்சிக்கு போய் வேறு ஒருவரைத் தலைவராக ஏற்க உடன்பாடு இல்லை' என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் பாக்யராஜ். ஆனால் இப்படிச் சொல்லி சரியாக பத்து வருடம் கழித்து,  2006ல் தி.மு.க.வில் இணைந்தார். எம்.ஜி.ஆரால் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் தி.மு.க.வில் இணைந்தது அவர் மீது பாசமாக இருந்த மிச்ச சொச்ச அ.தி.மு.க தொண்டர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் தி.மு.க.விலும் அவருக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அ.தி.மு.க.விலிருந்து வெகுதூரம் வந்துவிட்ட நிலையிலும், திமுகவில் எதிர்பார்த்த ஏற்றம் கிடைக்காத நிலையிலும் அரசியலிலிருந்து கிட்டத் தட்ட முற்றிலும் விலகிய நிலையில் இருந்தார் அவர்.  2011ல் ஜெயலலிதா அவரை கட்சியில் இணைத்துக்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் நடக்கவில்லை.

பாக்யராஜைப் பொறுத்தவரை பத்து வருட காலம் திரையுலகில் செல்வாக்கோடு இருந்தாலும் அவரது அரசியல் பிரவேசம் தோல்வியில் தான் முடிந்தது. தெளிவான கொள்கைகளோ, செயல்திட்டங்களோ, ஒரு முழு மனதான அர்ப்பணிப்போ இல்லாமல் திரைப்படப்புகழை வைத்து மட்டுமே அரசியலில்  நிலைத்து நிற்க முடியும் என்ற எண்ணம் முற்றிலும் தவறானது என்பதற்கு மற்றொரு உதாரணமாக இருக்கிறார் பாக்யராஜ். 

இருந்தும் அவரது அரசியல் ஆசை பட்டுப் போய்விடவில்லை. ஜெயலலலிதா மறைந்த பின்னர் ஒரு மாதத்தில் வந்த அவரது பிறந்த நாளின் போது  ‘ அ.தி.மு.க மிக குழப்பத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் பக்தனான நான் அந்த குழப்பத்தை தீர்க்க என்னால் முடிந்ததைச் செய்வேன்' என்றிருக்கிறார்.

ஏப்ரல், 2018.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com